தமிழக அரசின் பரிசினை அண்மையில் இந்த நூல் பெற்றுள்ளது. இதில் அவ்வப்பொழுது டாக்டர் பாஸ்கரன் எழுதிய 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘எல்லாம் மரம்தான் -மனிதன் மறந்தான்’ என்ற முதல் கட்டுரை முதல் ‘உடல் ஒரு பொழுதுபோக்கு கூடம் அல்ல’ என்ற இருபதாம் கட்டுரை வரை அனைத்தும் அனுபவ கட்டுரைகளாகவே உள்ளன.
அன்றாட வாழ்விற்கு தேவையான சித்த மருத்துவ குறிப்புகளும் ஆலோசனைகளும் நூல் முழுவதும் விரைவியுள்ளன. இதைச் சாப்பிடலாமா, அதை சாப்பிடலாமா, எப்போது சாப்பிடுவது? போன்ற பல்வேறு கேள்விகள் நோயாளிகளின் மனதைச் சூழ்ந்துள்ளன. இத்தகைய கேள்விகளுக்கு சரியான விடைகளை இந்த நூல் தருகின்றது. சர்க்கரை நோயாளி தேன் சாப்பிடலாமா? இந்த கேள்விக்கு பொதுவான விடை கூடாது என்பதாகவே இருக்கும். ஆனால் இயற்கையான இனிப்பு சத்தான தேனை எடுத்துக் கொள்ளலாம் என நூலாசிரியர் சித்த மருத்துவர் பாஸ்கரன் தெளிவுபடுத்துகின்றார்.
இந்நூலில் உணவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதயத்துக்கு நண்பராக இருங்கள் என்ற கட்டுரையில் இதய பாதிப்பை தவிர்க்கும் மற்றும் இதயத்தை பலப்படுத்தும் உணவு பட்டியல் தரப்பட்டுள்ளது குழந்தையின்மை போக்கும் உணவுகள்- இது ஒரு கட்டுரையின் தலைப்பு. அடுத்த கட்டுரையின் தலைப்பு சர்க்கரை நோயை குணப்படுத்தும் எளிய உணவு பழக்கங்கள். மற்றொரு கட்டுரை பனை தரும் பாரம்பரிய நல்லுணவுகள். நூலில் ஏறத்தாழ சுமார் 60 மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குறிப்புகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கட்டுரை தலைப்புகளும் பத்தி தலைப்புகளும் படிக்க சுவராஸ்யமாகவே உள்ளன. ஒரு பத்தி தலைப்பு இவ்வாறு இருக்கின்றது “சூர தீர சுண்டைக்காய்”: உருவத்திலும் பேரிலும் தான் சுண்டைக்காய். ஆனால் உடலுக்கு நன்மை செய்வதில் உண்மையிலேயே இது பெரிய காய்தான் என இந்த பத்தி தொடங்குகிறது ரசமான விஷயமாக ரசம் உள்ளது. தசச் சாறு தான் ரசமாகும். தசம் என்றால் பத்து. மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம்,புளி, உப்பு ,கடுகு ஆகிய 10 பொருட்கள் சேர்க்கப்பட்டு ரசம் தயாரிக்கப்படுகிறது. ஒரு மூலிகை பலவிதமான ஆரோக்கியப் பலன்களை தருகின்றன என்பது நூலில் பல இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நரை திரை போக்கும் அருகம்புல் என்ற கட்டுரையில் அருகம்புல்லானது தோஷ வினை போக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், ஹீமோகுளோபினை அதிகரிக்கும், இதய அடைப்பை தடுக்கும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும், செல் உடைப்பைத் தடுக்கும் என பல்வேறு பலன்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டையும் புகழையும் கூறும் சித்தாவரம் என்ற இந்நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் (மொபைல் எண் 9080909600) இந்நூலை அழகுற வெளியிட்டுள்ளது. வாங்கி படித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
