கைகளால் பிசைந்து கவளம் கவளமாக உண்பதே தமிழர் வழக்கு. கவளம் என்பது ஒரு வாய் கொள்ளும் உணவின் அளவு .
வழக்கமாக மதியம் பிரகாஷ் சாருடன் அமர்ந்து சாப்பிடுவேன். 8 கவளம் அளவுதான் மதிய உணவு. என்ன இவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்கள்? என்பார். சிரித்தபடி, அவ்வளவுதான் முடிகிறது என்பேன்.
இன்று சித்த மருத்துவர் டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் நூலைப் படித்தேன். (நூலை அனுப்பி உதவிய தம்பி கோகிலன், அன்பிற்கினிய எழுத்தாளர் நாராயணி கண்ணகி இருவருக்கும் அன்பு)
Where There Is No Doctor: A Village Health Care Handbook, டாக்டர் வெர்னர் எழுதிய நூல். உலகில் அதிகமாக விற்ற மருத்துவ நூல். இப்படி சமகாலத் தமிழில் ஒரு நூல் வேண்டுமே! ஆசைப்படுவேன்.
அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது தேநீர் பதிப்பகம் . மருத்துவரை ‘கற்றான்’ என்றும் ‘தீர்ப்பான்’ என்றும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். ‘மருந்தன்’, ‘மருத்துவன்’ போன்ற பிரயோகங்கள் கலித்தொகை காலத்தே வந்துவிட்டன. வள்ளுவர் கூறும் கற்றானாக இருக்கிறார் மருத்துவர் டி. பாஸ்கரன்.
உள்ளங்கை விரல்களின் உட்பகுதியில் 17,000 தொடு உணர்வுகளும் நரம்பு முடிச்சுகளும் சங்கமிக்கின்றனவாம்.
சித்த மருத்துவம் இதை வர்மப் புள்ளிகள் என்கிறது. உணவைப் பிசையும்போது இந்நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
உலகில் ஒவ்வொரு இனக் குழுவுக்கும் மரபு வழியான மருத்துவ முறைகள் இருக்கின்றன.
அக்குபஞ்சர், அக்குபிரஷர், ஹோமியோ, ஹிஜாமா, குவா ஷா, வாட்டர் தெரஃபி, டான்ஸ் தெரஃபி, மலர் தெரஃபி, குய், கிகோங், ஹிப்னோதெரபி, ரெய்கி, யுனானி, யூரோபதி, வக்சிங், யோகா..
இப்படி நிறைய மருத்துவ முறைகள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது தமிழரின் சித்த மருத்துவம்.
ஆனால் இன்று ஒவ்வொருவர் சொந்த மருத்துவ முறைகளையும் மாற்று மருத்துவம் என அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறமாக இருந்த மருத்துவம் வியாபாரமாகி விட்டது. அறிகுறிகளை வைத்து நோய்கள் கணிக்கப்பட்ட நிலை மாறி, பரிசோதனை அடிப்படையில் நோயைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தெருவில் ஒரு மருத்துவர் என்ற நிலை மாறி, ஓர் உறுப்புக்கு ஒரு மருத்துவரை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமர்த்தியிருக்கின்றன.
முட்டிவலி முழங்கால்வலி என்றால் வாகைத் தழை வதக்கி கட்டிய மூத்தோர்களை வெள்ளாற்றங்கரையில் புதைத்துவிட்டு, மூவ் வாங்கித் தடவிக் கொண்டிருக்கிறோம். குடலேற்றம் தெரியாமல் கோடி பணம் செலவழிக்கிறோம்.
எங்கள் குளத்தங் கரையில் இன்றளவும் காலத்தின் பழுத்த தழும்பேறிய அரசமரம் நிற்கிறது. அதன் அருமை தெரியாத தலைமுறை நிழலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறது. குளத்தில் மூழ்கிக் குளித்த பெண்கள், அரசு மரத்தை சுற்றியதேன்? எனக்கே இப்போது மருத்துவர் டி பாஸ்கரன் கூறிதான் தெரிகிறது.
அரச மரத்துக்கு அஸ்வத்தம், திருமரம், கணவம் என்ற பெயர்களும் உண்டாம். அரசமரம் வெளியிடுகிற காற்றில் 3- பீட்டா ஹைட்ராக்ஸீஸ்டீராய்ட் டீஹைட்ரோஜினேஸ், 17-பீட்டா ஹைட்ராக்ஸீஸ்டீராய்ட் எனும் பைட்டோவேலடைஸ் வேதிப்பொருள் இருக்கிறதாம். இதை சுவாசிக்கும்போது குழந்தைப் பேற்றை உருவாக்கக் கூடிய கார்ட்டிசோல், அல்டோஸ்டீரோன், ஆண்ட்ரோஜென், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றனவாம்.
அரச மரத்தின் வேர்,பட்டை, இலை, விதை எல்லாமே மருந்து. புற்றை குணப்படுத்துகிறது. உயிரணுக்களுக்கு ஊக்கம் தருகிறது. சுருக்கமாகச் சொன்னால், சேலம் வைத்தியர் செய்வதை
ஒரு அரச மரம் செய்கிறது! என்கிறார் டாக்டர் பாஸ்கரன்.
அரச மரத்தை மட்டுமல்ல, அருகம்புல் குறித்தும் அரிய தகவல்கள். இதய அடைப்பு நீங்க, ஹீமோகுளோபின் அதிகரிக்க, இரத்த ஓட்டம் சீராக, அருமருந்து அருகம்புல். ‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி’ வாழ்த்துகிற பண்பாடும் மருத்துவமும் இணைகிற இடத்தையும் சுட்டுகிறார் டாக்டர்.
சர்க்கரை, மூட்டு வலி, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, இப்படி நம் காலத்தை வாட்டி வதைக்கிற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது? எளிமையாக விளக்குகிறார் பாஸ்கரன்.
நூலைப் படிக்கும்போது பாட்டிகள் பேணிய ஐந்தறைப் பெட்டிக்குள் கைவிட்ட உணர்வு. ஏராளமான மருத்துவக் குறிப்புகள். எளிதில் பின்பற்றும் வண்ணம் உள்ளன.
பழங்காலத்திலிருந்தே சித்த மருத்துவர்களுக்கு நூல் இயற்றுதல் கைவந்த கலை . திருமூலர் காலம் தொட்டு வருகிற பழக்கம் இது.
